Wednesday 29 April 2020

வேள்பாரி வாசிப்பனுபவம்...
வேள்பாரி வாசிக்கும் முன்.
1. பாரி கடையேழு வள்ளல்களில் ஒருவன்.
2. முல்லை கொடிக்கு தேர் கொடுத்தவன் பாரி.
3. கபிலர் - குறிஞ்சித்தினை

வேள்பாரி கையில் இருந்தும் இதே செருக்கு கொண்டுதான் வாசிக்க துவங்கினேன்.
பாரி மன்னனின் புகழும் பெயரும் எங்கும் பரவியிருக்கிறது.. எப்படி இது சாத்தியம்.. தெரிந்துக்  கொள்ள வேண்டும் எனும் ஒற்றை கீற்றுடன் தான் பறம்பு மலை அடிவாரத்தில் கால் பதித்தார் கபிலர்.
நீலன் வந்தான். கபிலருக்கும்  செருக்கு நம்மை போன்றது ஆயிற்றே.. எப்படி நீலனை அணுகி இருப்பார்..

அப்படியாக தொடர்கிறது பறம்பு மலையின் சாகசம்...

பறம்பு முழுதும் பேசுகிறது பாரி என்னும் ஒற்றை கீற்று பற்றி..
சிறு புல் முதல் பெருத்த யானை வரை.. யாருக்குதான் தெரியாமல் இருக்கும், அரண் ஆயிற்றே..
இயற்கையோடு ஒன்றி வாழும் மக்களின் இயல்பு. அறம் பிறழாமல் செய்யுற வாழும் மக்களின் கண்ணியம். தற்காப்பு புரியும் அறிவுநுட்பம் கத்தி கூர்மை. வாழ்வியல் கூற்றுகள் பாரியின் பறம்பு மலையை கிழக்கு ஆக பார்க்கும் உணர்வு.

ஒரு ஊர்ல ஒரு ராஜா.. இப்படியான பல வரலாறு கதைகள் வழியே நம்மிடையே பல மன்னர்கள் வந்தவண்ணம் இருப்பர். காலத்திற்கு ஏற்றவாறு வடிவம் மாறிக்கொண்டே இருக்கும். வரலாறு பேசியவண்ணம் கதை நகரும்.மன்னனின்  பெருமை கதை வழிய நீண்டு வாழும்.

ஆனால் சு.வெ நம்மிடம் கொண்டுவந்துள்ளது பாரியின் வீரம் பேசும் வரலாறு மட்டுமா???!
நிச்சயம் வேறு..

ஒரு மன்னன் தன் குடியை காக்க வேண்டும். தன் மக்களை எதிரியின் பிடியிலிருந்து காக்க வேண்டும். இந்த நடையில் இருந்து
பாரி எவ்வாறு வேறு படுகிறான்??

இயற்கையோடு கொஞ்சி தவழும் வாழ்வு நெறி..
ஒரு மன்னன் தன் மக்களை காக்க சிந்திப்பான். அறிந்ததே.. புல்,பூண்டு,விதை,செடி,கொடி,இலை,மரம்,வேர்,மிருகம், பறவை,மண் இதனையும் தன்னுள் வைத்து அறம் காக்கிறான்.
வியப்பின் உச்சம்.

காலத்தின் நிலை அறிந்து சு.வெங்கடேசன் அவர்கள்.
இந்நூலின் கரு வரைந்து உள்ளார்.

நாம்தான் அனைத்தையும் அடக்கி ஆளும் ஆற்றல் கொண்டு வந்துள்ளோம் என்று செருக்கு இருந்தால் இதோ இந்த நொடி அற்றுப்போகட்டும்.
இயற்கை எவ்வளவு பெரிய பொக்கிஷம். அதுதான் மனிதனின் வாழ்வை செய்கிறதே ஒழிய மனிதன் நான்தான் அனைத்தையும் ஆள பிறந்தவன் என்று எண்ணம் கொண்டால் கொன்றுவிடும் இந்நூல்.

விகடன் பிரசுரம் என்றும் வியப்பு கொடுக்க தவறுவதில்லை. சான்று கதை வடிக்கும்
ஓவியங்கள். மனக்கண்ணில் விரியும் காட்சிகள் பக்கங்களில் தூரிகை..

பிரமிப்பு...நீங்காமல்
சு. வெ அவர்களிடம் நாலைந்து கேள்வி நாணை தொடுப்போம்...

1.இவ்வளவு  செம்மையான  திட்டமிடல் எவ்வாறு சாத்தியமானது?

2. புல்,பூச்சி, பச்சி,பாம்பு,விலங்கு,பறவை,பாரி,பறம்பு
நுணுக்கம் எங்கேயிருந்து சேகரித்தீர்?

3. போர்க்களம் வடிவமைப்பு அறம் பேணுதல்,நிலைமான் கோல்சொல்லி, போருக்கான விதிகள் வரையறுப்பது இதெல்லாம் எப்படி உருவானது?

மீண்டது பாரி மட்டும் இல்லை.. மனிதன்
மீண்டு வர இயற்கை அறம் போற்ற வேண்டும் என்னும் கருத்தினை தெரிவிக்கவும், பாரி யை ஈன்று    தந்துள்ளார் சு.வெங்கடேசன்.

பிரமிப்பு நீங்காமல்..
இன்னொரு முறை பறம்பு நோக்கி பயணிக்க தோன்றுகிறது..
இம்முறை சோமபப் பூண்டு பானம்,கொள்ளிக்காட்டு விதை, பாழி நகர் கற்கள், தேவவாக்கு  விலங்கு அடைய துணிந்த வணிகம் மோகம் கொண்டு உள்ள மூவேந்தர்களின் பிடியிலிருந்து தப்பி நீலன்,மயிலா,பொற்சுவை,உதிரன்,தேக்கன்,முடியன், இரவாதன், பழையன் இவர்களின் வழியில் தொடரலாம் என்று உத்தேசம்...

"பனையன் மகனே...
பாரி வேளே
நின்னை வெல்வோர் யாருமில்லை..."
பறம்பு நோக்கி மீண்டு(ம்)ஒரு முறை..

~வாசியுங்கள். நேசியுங்கள்.
~அழகு.
#8/25

Monday 27 April 2020

நூல் : காட்டில் ஒரு மான்
ஆசிரியர் : அம்பை ( சி.எஸ். லக்ஷ்மி)
முதல் பதிப்பு : 2000
இலக்கிய நடை: சிறுகதை
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : 225




தொகுப்பில் 17 சிறுகதைகள் அடக்கம்.1995-2000 காலகட்டத்தில் முளைத்த கதைகள்.
எனில் "பெண்ணியம்" என்னும் சொல்  இந்திய பெண்களின் வாசம் அறிந்திருக்கும் காலத்தில் முளைத்த கதைகள்.

மணி ரத்னம் இயக்கிய படங்கள் போன்று அம்பை அவர்களின் கதைகளும். அழகியல் பேசும் திரைக்கதை,மொழிநடை. எங்கும் பரவியிருக்கும் அழகுணர்ச்சி. பெண்களை பற்றி கையாளும் தொகுப்பு ஆதலால் தான் இவ்வளவு அழகு பேசப்படுகிறது என்று நினைத்தால் மறுபுறம் அந்த 1995-2000 காலம் பெண்களின் வசம் பெண்ணியம் வாசம் எட்டிப்பார்த்தது எனலாம்.

அழுத்தம் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் செல்கின்ற வழியே இதான் மா நடந்தது, இதுதான் புரட்சி பாதைக்கு வழி  என்று கை பிடித்து கூட்டி செல்லும் முறை சொர்கம்.

"பயணம் 1,2,3" என்று மூன்று வேறு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கதைகள். மூன்றிலும் அம்பை அவர்களின் மனப் போக்கு வேறு படுவதை உணரலாம்.

அன்றாடம் உலா வரும் பெண்கள் கதாபாத்திரங்கள். அம்மாவாக இருக்கலாம். கல்லூரி ஆசிரியை ஆக இருக்கலாம்.
இசை பிரியயை ஆக இருக்கலாம். துறவி ஆக முற்படும் வேற்று சித்தாந்தம் உள்ள பெண்மணி. இப்படி கதாபாத்திரங்கள் கதை வடிப்பார்கள்.

"வாகனம்" என்னும் கதையில் வரும் பெண்ணிற்கு வண்டி ஓட்ட பயில்வதே கனவு. கனவு மெய்யாக எவ்வாறு முயற்சி செய்கிறாள் என்பதும்,அந்த காலக்குடும்ப அமைப்பில் இதனின் சிக்கல்கள் என்ன என்பதும் அம்பையின் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடு. அம்மா கண் முன்னே வந்ததும் நினைவில் பத்திரம். ஒரு வேளை அம்மாவின் ஏக்கமும் இதுதானா என்றும் தோன்றுகிறது.

"அடவி" என்னும் கதை இந்த தொகுப்பில் வெளியானது.சீதை ஒரு நிகழ்வு இராமாயணத்தில். இராமன் கொண்டாடப்படுகி றான். அவன் புகழ் ஓங்கி ஒலிக்கிறது பார் எங்கும். நான் சீதையை கொஞ்சம்ப்போல் என் கதையில் எடுத்து செல்கிறேன் என்று சீதையின் வாயிலாக தொலைந்துபோன  சீதைகளை பேசியுள்ளார் அம்பை. இந்த சிறுகதையின் நடை மிகவும் கவனத்தை ஈர்த்தது. இரண்டு கோணங்களில் பார்க்கும் விதம் அழகியலின் தரிசனம்.

"பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்" கதையில் வரும் அம்மா கதாபாத்திரம்  அனைவரும் அடுத்து காண விரும்பும் நம்மில் ஒருவராகக் கூடும். அனைவருக்கும் அவரவர் வாழ்வை வாழ உரிமை உள்ளது என்று மிக சூசகமாகக்குரல் கொடுத்த பெண்மணி இவரே. தொகுப்பில் உள்ள அனைத்து பெண்களின் கலங்கரை விளக்கம்.

புரட்சிப்பல கண்ட  பிறகே பெண்ணியம் பேசுறாங்க பாருங்க, என்று கடந்த சில ஆண்டுகளாக கேட்க நேர்கிறது.போகிற வழி மிகவும் சாதகமாக அமையபெற்று இருப்பின் நிச்சயம் அம்பை வடித்த சில பெண்கள் அந்த போராட்டங்களை கடந்து வந்தவர்கள் ஆக இருப்பர்.

இந்தாங்கமா இதான் நடந்தது, படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கதையினை நகர்த்தி கொண்டு போன விதம் அழகு.

Liberation என்று சொல்லலாம், அம்பை கதைகளை வாசித்த பிற்பாடு தேங்கி இருப்பது.

மணி ரத்னம் படங்கள் பார்ப்பீர்கள் என்றால் அம்பை உங்கள் புத்தக வரிசையில் இருப்பார்.

~ வாசியுங்கள். நேசியுங்கள்.

~ அழகு.
#7/25

Sunday 26 April 2020

நூல் : அவளுக்கு வெயில் என்று பெயர்
ஆசிரியர் : தமிழச்சி தங்கபாண்டியன்
இலக்கிய நடை : கவிதை தொகுப்பு
முதல் பதிப்பு : 2015
பதிப்பகம் : உயிர்மை
விலை : 170



நவீனம் முதல் தொன்மை வரை boomerang பயணம் நிச்சயம்.

பெண்மை மையப்புள்ளி .
பேச்சி,கங்கம்மா,பிச்சையம்மா,கச்சம்மா,எல்லம்ம்மா,தொடங்கி ஹேமா,வேதா, மைதிலி வரை அனைவரும் கத்திமுனை கூறுகள்.
கவிதை கூற்றுகள்.

வெயில்,மழை, இரு தொகுப்பு நூலின் எழில் கொஞ்சும் ஹைக்கூ சாரல்.

மற்றவை குறைந்தது மூன்று முறை வாசித்த பிற்பாடு அர்த்தம் புரிந்தது.
(Layered meaning புரிந்துக்கொள்ள குறைந்தது மூன்று முறை வாசிக்க வைத்தது).

வாசிப்பின் தளம் செம்மையான குதூகலம்.

சற்று பொறுமையுடன் மீண்டும் ஒரு முறை வாசிக்க தூண்டும் மொழி வளம்.

தொகுப்பிலிருந்து...
1.ருசி பார்த்த ஒரு சொட்டு
கொதிஉணவின்
சுவையோடு ஒடுங்கும்
உணர் நரம்புகள் -
அறிய மீதி உணவில்
பெண் நாவிற்கே முழுப் பங்கும்.
( அன்றாடம் பெண்களின் அனுபவம்,கவிதை மொழியில் சற்று ருசி கூடிற்று.)

2.ஒரு விலகலை
ஒரு பிரிவை
ஒரு துக்கத்தை
சொட்டு முத்ததில்
மறக்கடித்து விடுகிறது மழை.

3.மைத்துளியிட்டு நிரப்பிய
கவிதை வேண்டி
சுயநனையுமென்னை
வெற்றுக்காகிதமாயித் திரும்பி
வரச்சொல்லி விரட்டியடிக்கிறது
ஞான மழை.

4.மகளுக்கு அப்பா
முதலெழுத்து மட்டுமா என்ன -
அவளுக்கு
அப்பா -
அன்பின் முலை சுரக்கும்
ஆதித்தாய் மடுவின்
மேடிட்ட சுனையும்
சூலுறாக் கருப்பையும்
சுடரொளியும் கூட!
( மிகவும் அழுத்தம் கொண்டு, அடையாளம் பேசும் கவிதை,அப்பாவின் மகள்களுக்கு,புரியும் பிடிக்கும்)!

5. Dude Bro Honey
இடையே
வெண்பொங்கல் சுவை நடுவே
கண்விழிக்கும் மிளகுச் சுவையென
' எல்லே இளங்கிளியே'

இன்னும் தொகுப்பில் மேற்கோள் காட்டும் விதத்தில் அமைந்துள்ள கவிதைகள் ஏராளம்.

கவிதை மழையில் கற்றுக்கொண்டது ஒரு அனுபவம்.

தமிழச்சி கவிதை மொழி பெண்வாசம் பேசும்.

~வாசியுங்கள். நேசியுங்கள்.

~அழகு.
#6/25






Wednesday 22 April 2020

நூல் : சஞ்சாரம்
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
முதற்பதிப்பு : 2018
இலக்கிய நடை : நாவல்
(2018 சாகித்திய அகாதமி விருது பெற்றது)

மங்கள இசை - ஒரு காலகட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தலையாய, முதன்மை நிகழ்ச்சி. (இப்போதும் கூட).
இதனை தொடர்ந்து அன்றைய இதர நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.
தீபாவளி,பொங்கல் என்றால் மங்கள இசை மொழியே முதலில் பேசும்.

 குழந்தையாக இதான் நினைவில் தங்கியது. அதுவரை யாரோ தொலைக்காட்சி பெட்டிக்குள் சென்று, அமர்ந்து இசை மொழி ஆற்றுகிறார்கள் என தோன்றும்.

வளர்ந்து சற்று வெளியுலகம் பார்த்த போது கோவிலில் காண நேர்ந்தது. கோவில் திருவிழா,திருமண விழா இங்கே இவர்களை பார்த்த ஞாபகம். இன்னும் சற்று முன்னோக்கி நகர்ந்து வாழ்க்கை முறை என்ன,எவ்வாறு வாத்தியம் பரிச்சயம் ஆகிறது,இவர்களுடைய வாழ்வாதாரம் என்ன என்றெல்லாம் நின்று ஒரு நொடி கூட யோசித்தது இல்லை.

சமூகத்தில் ஒரு அங்கம்,என்னை போன்று இவர்களும் சமூகத்தின் ஒரு பாகம் என்றும் கூட யோசித்தது இல்லை.
ஒரே புத்தகம் காணும் காட்சியை கடுமையாக மாற்றியுள்ளது.

நாதஸ்வரம் பெரும்பாலான மக்கள் கோவில் திருவிழாக்களில் ஊர்வலம் வரும்போது வாசிக்க கேட்டிருப்போம்.
அதுதான் அதிகபட்சம் நமக்கு இசைக்கலைஞர்கள் இப்படியும் இசை கருவி கையாள்கிறார்கள் என தெரிந்து கொண்ட தருணம்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஓலமாகவே இந்நூல் அமைந்துள்ளது. பக்கிரி நாதஸ்வர கலைஞன். ரத்தினம் குழு கரிசல்காடு ஓதியூர் பகுதியில் வசிக்கும் அன்றாடம் பிழைக்கும் இசை கலைஞர்கள். சோழ நாட்டில் நாதஸ்வரம் வாத்தியம் பயின்று பயிற்சி செய்வோர் புகழின் உச்சியில் இருக்க ரத்தினம்,பக்கிரி போன்றோர் அன்றாடம் பிழைப்பு நடத்துவதே பெரும் போராட்டம்.
வாழ்க்கையின் எதார்த்தம் சவுக்கடி கொடுத்தபடியே உள்ளது.

வறுமை அவர்களின் வாழ்க்கை முறையை பெரிதாக மாற்றிவிடுகிறது. ஒரு நாள் இசைக்கலைஞர்க்கு
கிடைக்கப்பெறும் அங்கிகாரம்,கௌரவம் நிச்சயம் கிடைக்கும் என்ற எண்ணம் பல உள்ளூர் வாசிகளின் இகழ்ச்சி, தூற்று,கொச்சை பேச்சு - ஐ, பொறுத்து கொள்ள  செய்கிறது.

பக்கிரியின் வாயிலாக ஒரு நாதஸ்வர கலைஞன் எவ்வாறு செதுக்கப்படுகிறான் என்பதை அழகாக, துல்லியமாக விளக்கியுள்ளார் எஸ். ரா.
இராகவையாவை குருவாக பெற்று நாதஸ்வரம் பயில்கிறான் பக்கிரி. பள்ளி படிப்பு அல்லாது இசைக்காக இசைந்து அனுப்படுக்கிறான்.
வறுமை ஒழிக்க வருமானம் கிடைக்கும் என்ற அசட்டு நம்பிக்கை பக்கிரியின் அப்பாவிற்கு.

பக்கிரியின் வாயிலாக டேவிட் ஹாக்கின்ஸ் அறிமுகம் ஆகிறார் நமக்கு. வெள்ளைக்காரன் இந்தியா வை ஆட்சி செய்ய மட்டும் முற்படவில்லை. டேவிட் போன்று சில கலை வெரியர்களையும் அறிமுகம் செய்துள்ளது.  நாதஸ்வரம் இசை ஒரு வகை ஈர்ப்பு ஆக மாறிவிட சிவன் கோவி லில் தங்கி ஞானம் பெறுகிறான்.

சுமார் எட்டு ஆண்டு காலம் பயிற்சி தேவை படுகிறது நாதஸ்வரம் பயில, செம்மையான மூச்சு பயிற்சி,அதிகம் ஆளுமை மூலமாகவே நாதஸ்வரம் இசைக்க முடியும்.
இவ்வளவு சிரத்தை எடுத்து பயின்ற போதும் வாய்ப்புகள் சரிவர கிடைப்பதில்லை.
மற்ற இசை கலைஞர்க்கு கிடைக்கும் மரியாதை, அங்கீகாரமோ கிடைப்பதில்லை.
முரணாக வசை மொழி,இகழ்ச்சி மட்டும் நிரந்தரம் ஆகிறது.

ஜமிந்தர்கள்,இசை விமர்சகர்கள்,முகலாய மன்னன் மாலிக் கபூர் அவர்களை தரிசனம் செய்ய வைத்த இசை நாதஸ்வரம் என்பது நூலின் குறிப்பு.

இவ்வாறு அதிசயம் பொதிந்த இசை கருவி என்றாலும் சமூகத்தின் வரம்பு இதனை அங்கீகரிக்க மறுத்துவிட்டது என்பது நிதர்சனம்.

நூலின் ஊடே சென்று பக்கிரி வாயிலாக நிறைய அறிந்து கொண்ட உண்மை ஒரு தெளிந்த ஓடையில் செல்லும் இலை என மாற்றியுள்ளது. தெளிந்த நீரோடை இவர்களின் வாழ்க்கை இல்லை என்பதும் வலி தரும் உண்மை.

 மாற்றம் தரக்கூடிய வாசிப்பின் பட்டியலில் இந்நூல் நிச்சயம் அடங்கும்.

எஸ்.ரா அவர்களுக்கு மரியாதையும் வணக்கத்தையும் தெரிவிக்க வேண்டும், அங்கிகாரம் இல்லாத மனிதர்களுக்கு நூல் ஒன்றை வடித்தமைக்கு.

பாதை இருக்கிறது. வழி  செம்மை அடையும்.
இசை உள்ளவரை கலைஞர்கள் கௌரவம் ஓங்கும்.
இசை சமூக ஏற்றத் தாழ்வுகளை என்றுமே அங்கீகரித்தது இல்லை.

மாற்றம் நோக்கி நாளை செய்வோம்.

~வாசியுங்கள். நேசியுங்கள்.

~அழகு.
#5/25

Monday 20 April 2020

நூல் : திருக்கார்த்தியல்
ஆசிரியர் : ராம் தங்கம்
இலக்கிய நடை : சிறுகதை (தொகுப்பில் -  11சிறுகதைகள்)
முதற்பதிப்பு : 2018
பதிப்பகம் : வம்சி



~ What one loves in childhood stays in the heart forever.

குழந்தை பருவம் ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கும். மிகவும் அமைதி நிறைத்த பருவம் எனலாம். இவ்வாறு அமைய வரம் இருப்பின் அக்குழந்தையின் வாழ்வும் செய்யுரும்..

முரணாக முட்கள் நிறைந்த பாதை அவரின் குழந்தை பருவம் எனில் , சுவடு தழும்பாக காலம் வரை கரை ஆக தொடரும்.

11 சிறுகதை வாயிலாக 11 அப்பாவியான குழந்தைகளை கடந்து செல்லும் பயணம் கிட்டும் நூலின் வாயிலாக.

அன்றைய தினம் நிச்சயம் இல்லை என நன்கு அறிந்த சிறுவர்கள், கதையின் கரு சுமந்து வருகின்றன.

லிங்கம்,செந்தமிழ்,வினோத், பானி,சுரேஷ்,கார்த்திக் மனதில் எளிதாக இடம் பெறுகின்ற சிறுவர்கள்.
இவர்களின் பதிவை கடந்து செல்லும் போது மனதில் பாதிப்பு நிச்சயம்.

11 சிறுகதைகளும் ஆக சிறந்தது எனினும் மனதில் நின்றவை
1. வெளிச்சம்
Positive phase என சொல்லக்கூடிய திருப்பம் லிங்கம் அறிகிறான்.

2. செந்தமிழ்
இந்த சிறுவனின் கோவம் நியாயமானதாக உணர்வீர்கள்.

3. வினோத் தன் பிராணனை போக உழைக்கையில் பரிதாபம் பச்சாதாபம் தோன்றாது. மாறாக சமூகத்தின் மீது கோவம் வரும்.

ஆக சிறந்த 11 சிறுவர்களும் ஏதோ ஒரு சமூக தீமையில் இருந்து மீண்டு வர முயல்கின்றனர்.

முயற்சி பலன் தந்ததா என்பதே தொகுப்பில் உள்ள கரு.

வாழ்க்கை சொர்க்கம் எனில் குழந்தை பருவம் தந்த பாக்கியம்.

இயலாமை சமூகத்தின் மறு பக்கமாக திரும்பி விடுகிறது.

அருமையான
கூர்மையான
குழந்தைத்தனம் பொதிந்த நூல்.

~ வாசியுங்கள். நேசியுங்கள்.

~அழகு.
#4/25
நூல் : வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை
ஆசிரியர் : பேயோன்
முதற்பதிப்பு : 2016
பக்கம் : 244
பதிப்பகம் : சஹானா




கவிதை வாசிப்பது என்பது அந்தி பொழுதின் ரம்மியம். சூரியன் வீடு திரும்பி கொண்டிருக்கலாம், பறவைகள் கூடு அறியலாம். எங்கோ இளஞ்சூட்டில் எஞ்சிய பனி, கோட்டை எழுப்பி வர முற்படலாம். அப்படியான ஒரு அலாதிய பிரமிப்பு நம்முள் எஞ்சும் கவிதை வாசிக்கும் நேரம்.
பேயோன் ஒரு களஞ்சிய பெட்டகம். எதை பற்றி வேண்டுமானாலும் கவிதை செய்யலாம். இந்நூல் அதற்கு சான்று.

இயற்கை
மிருகம்
காதல்
மனிதன்
எண்ணம்
எண்ணத்தில் புதைந்திருக்கும் வண்ணம்
ஜனனம்
மரணம்
யோசனை
என அனைத்து அங்கமும் அடக்கம் தொகுப்பில்.

நாள்தோறும் கடந்து, கடத்தி சென்ற அனைத்து சிறு முதல் கூர் அணுக்கள் வரை அனைத்தும் ஏந்தி வந்துள்ளது நூல்.

கவனத்திற்கு :
1. அட்டை படம் சுவாரசியமின்றி தொய்வு ஏற்படுத்தலாம்.
2. 250 கவிதைகள் உள்ளதால் அதில் சிறந்த அல்லது மிக பிடித்த கவிதை ஒன்று உள்ளது என்று வரையறுக்க முடியவில்லை.
3. தித்திப்பு - திகட்டல்.
(பிரித்து அறிய இயலவில்லை).

தொகுப்பில் இருந்து ஒரு சில துளிகள்:
பல் விழுதல்
ரகசியம்
ராட்சத மலர்*
பார்க்கும் புத்தர்
நேற்று பெய்த கனமழை

~ புயல் ~
பெறுங்காற்று மூட  விடவில்லை
திறந்துவைத்துப்
 போனால் அறைந்து சாத்துகிறது.

~கொள்கை ~
சகிப்போம்
சிறகடிப்போம்

கடலோர கால்நடை பயணம் செய்து மீண்டும் வீடு திரும்பும் அலாதியம்.

வாசியுங்கள். நேசியுங்கள்.
~அழகு.
#3/25


நூல் : பசி(Hunger)
ஆசிரியர் : எலிஸ் பிளாக்வெல்
மொழியாக்கம் (தமிழ்) : ச. சுப்பாராவ்
இலக்கிய நடை : சிறு நாவல் (Novella)
முதற்பதிப்பு : 2013


  இளம் விஞ்ஞானி ஒருவர் லெனின் கிராடு மாநகரத்தில் விதைகள் பண்படுத்தும்,சேமிக்கும் ஆய்வு மையம் ஒன்றில் வேலை செய்கிறார். பின்னணி ஹிட்லர் படை ஆக்கிரமிப்பு. சுமார் 872 நாட்கள் அங்கு சூழல் தலைகீழாக மாறிவிடுகிறது. உணவு தட்டுபாடு தலைவிரி கோலமாக மாறுகிறது. உண்ண ஒன்றும் கிடைக்காமல் மக்கள் மர கீற்றுகள் முதல் எலி வரை என்ன கிடைத்ததோ அதை உண்ண முற்படுகின்றனர். ரேஷன் மானியம் என்று அளவான ரொட்டி குடுத்து உதவுகிறது. ஆனாலும் மக்கள் பசி போராட்டத்தில் தோற்று மாய்ந்து மடிகின்றனர்.
சிறார்களுக்கு மலிவான பசை முதல் திருடிய மர கீற்றுகள் கஞ்சியாக கொடுக்கப்படுகிறது. இருந்தாலும் பசி கொடிய எதிரியா உருவெடுக்கிறது.

அரசியல் அமைப்புக்கள் விதைக்கிடங்கின் உதவி நாடுகிறது. அந்த அமைப்பின் இயக்குனர் சிறை செல்கிறார். இளம் விஞ்ஞானி பலர்  பசியால் வாடியபோதும் அங்கே பல இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட விதை,தானியம்,அரிசி,பழ கொட்டைகள் என அனைத்தையும் பாதுகாக்கின்றன.

பாதுகாக்கும் பணி, போராட்டம் ஆகிறது. பல ஆய்வு புரியும் இளம் வயதினர் இறை ஆகிறார்கள்.

872 நாட்கள் கழித்து லெனின் கிராடு ஹிட்லரின் நாஜி படையின் ஆக்கிரமிப்பு பிடியிலிருந்து அகழ்கிறது .

ஆய்வு மையம் நிம்மதி பெருமூச்சு விடுகிறது. ஆனாலும் அது பல ஆய்வு புரியும் இளைஞர்களை இழந்து அவலம் காண்கிறது.

" வலிதான் வாழ்க்கையின் விலை என்று எனக்குள் சொல்லிக்கொண்ட டேன்."
இறுதியில் விதைகளை காத்து நின்றவன் மட்டும் உயிர் பிழைக்கிறான்.


மனைவி,நண்பர்கள் என தன் வட்டம் இப்போது அவனுடன் இல்லை.

விதைகள் இருக்கும் குப்பிகள் மற்றும் பத்திரமாக அவனிடம் உள்ளது. எஞ்சிய ஒன்று.

ஹிட்லர்
போர் காலம்
சண்டை செய்வது
மாய்ந்து மடிவது
குண்டு வெடிப்பு
இதனை பார்த்தும், படித்தும் கேட்டும் பழகிய நமக்கு பசியால் மனிதனே மனிதனுக்கு எதிரி ஆன அவலம் காட்டுகிறது இந்நூல்.


பேசப்படாத பசி பிணி பற்றி நுணுக்கம் ஏந்தி நிற்கும் நூல் இது.

~வாசியுங்கள். நேசியுங்கள்.

~அழகு.
#2/25

Thursday 16 April 2020



நூல் : கழிமுகம்
எழுத்தாளர் : பெருமாள்முருகன்
விலை : 150
முதல் பதிப்பு : 2018
பதிப்பகம் : காலச்சுவடு


மனிதனின் இயல்புநிலை காலக்கணக்கில் மாறுபடும்,சிந்தனைகளும் வேறுபடும். இதனை Generation Gap என்று குறிப்பிடுவர். அழகான சூழலில் வாழும் ஒரு குடும்பத்தின் எதார்த்தம் இந்நூல். அசுரர் என்று மனிதனை அழகின் உச்சத்தில் வைத்து கதை வடித்துள்ளார் முருகன். அப்பா குமராசுரர். அம்மா மங்காசுரரி. ராவண குல  தெய்வம் என்று குறிப்பு உள்ளது நூலில். ஆதலால் மேகாஸ் என்று மகன் பெயர் சூட்டப்படுகிறான். காலத்தின் ஓட்டம் அப்பாவிற்கு,குடும்ப தலைவர் எனும் பதவி உயர்வு பெற்று தருகிறது. மகன் காலத்தின் சுழற்சியில் புதையுண்டு மாற்றம் ஒன்றே விதி என்று வாழ்வின் பக்கங்களை கடந்து செல்கிறான். இருவருக்கும்மான மன போராட்டம், புரிதல் எவ்வாறு நடைபெறுகிறது என்பது முருகனின் கைவண்ணம். சமீபத்தில் குழந்தைகளை கையாள்வது ஒரு குடும்பத்தின் சவால் ஆகியிருக்கும் மாற்றம் நாம் காணும் எதார்த்தம். அதனின் எதார்த்த வெளிப்பாடு இந்நூல். மொழி பரிமாற்றம் மிக அழகாக உள்ள பெருமாள் முருகனின் நாவல் இது.

வாசியுங்கள். நேசியுங்கள்.😊
~அழகு
#1/25 

SAPIENS

//Sapiens A Brief History of Humankind by Yuval Noah Harari//                                                                ...